ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெருநாவலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் 76 ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாடப்பெற்றது.
விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. கண்ணன் அவர்கள் தலைமை தாங்கித் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரை ஆற்றினார். அவர் தமது சிறப்புரையில், ” இந்தியத்திருநாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் என் மாணவச்செல்வங்களுக்கும், மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்ப் பெருமக்களுக்கும், அலுவலகப்பணியாளர்களுக்கும் என் இனிய சுதந்திர தின விழா வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு நாட்டில் வாழ்கிற பறவைகள், விலங்குகள், மரங்கள் ஒற்றுமையாக வாழ்வதே உண்மையான சுதந்திரம் என தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் கூறினார். பிளாட்டோ போன்றோரும் அதனையே வலியுறுத்தினர்.ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது, மற்ற நாடுகள் தோல்வியில், துயரத்தில் இருக்கும்போது நம்மைக் காப்பாற்ற இந்த நாடு இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ளும் வகையில் திகழ்வது ஆகும்.அமுதப்பெருவிழா என்பது 80 ஆவது ஆண்டின் சுதந்திர தின விழாவைக்குறிப்பதாகும்.நம் இந்தியத்திருநாடு இன்று முதல் அந்த அமுதப்பெருவிழா நாளை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் நமது தாய்த்திருநாடு அத்தகு பெரு வளர்ச்சியை அடைய வேண்டும். அடையும்.சாதி மத , வர்ண வேறுபாடுகளைக் களைந்து , இன்று முதல் நாம் நமது பயணத்தைத் தொடங்கி னால் இந்தியா அனைத்து வகைகளிலும் முன்னேற்ற பாதையை அடையும். விடுதலைப்போராட்ட வீரர்கள் பலரின் தியாகத்தில் பறக்கும் இந்த பாரத மணிக்கொடி , செம்மாந்து பறக்க வேண்டும். இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துகளை பெருமையோடு தெரிவிக்கிறேன் ” என்று பேசினார்.
விழாவில் இருபால் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.