“புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

380

“புதுக்கோட்டை புத்தகத் திருவிழா” குறித்து
பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 3.14 லட்சம் நபர்கள் பங்கேற்ற “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் 5வது புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

“புதுக்கோட்டை வாசிக்கிறது”

அதன் ஒருபகுதியாக இன்று (07.07.2022) புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்ட “புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் மாணவியர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 5வது புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற புத்தகப் பதிப்பகங்கள் தங்களுடைய புத்தகங்களை விற்பனை மற்றும் காட்சிப்படுத்துவதற்காக 70 முதல் 80அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், புத்தகத் திருவிழா குறித்தும், புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் புத்தக வாசிப்பு திருவிழா புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற தலைப்பில் இன்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 1,061 தொடக்கப்பள்ளிகள், 290 நடுநிலைப்பள்ளிகள், 112 உயர்நிலைப்பள்ளிகள், 107 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 96 உதவிபெறும் பள்ளிகள், 285 மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,967 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தைச் சேர்ந்த 150 அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிமன்ற அலுவலகம், பொது நுாலகம், கிராம சேவை மையம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 14,457 நபர்கள் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர்.

இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி, உதவி இயக்குநர்கள் ஸ்ருதி (ஊராட்சிகள்), இளங்கோ தாயுமாணவன் (தணிக்கை), அறிவியல் இயக்க புத்தக ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், வீரமுத்து, பாலகிருஷ்ணன், கவிஞர் முத்துநிலவன், கவிஞர் தங்கமூர்த்தி, அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை வாசிக்கிறது
நிகழ்வை தமிழகத்தின் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற கொடும்பாளூர் மூவர் கோயிலுக்கும் முன்பாக அமர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிர்வாகிகள்
ஆ.மணிகண்டன்,மரபு புகைகப்படக்கலைஞர்
ஆனந்தன் சன்னாசி,
உயர்நீதிமன்ற
வழக்கறிஞர் ஆனந்தன்,
தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிர்வாகிகள் சை.மஸ்தான் பகுருதீன்,
சு பீர்முகமது ஆகியோர்
பங்கேற்று புத்தகம் வாசித்தனர்.