நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசைஞானி இளையராஜா, பி.டி.உஷா நியமனம்- பிரதமர் மோடி வாழ்த்து!

492

இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும். அவ்வகையில், மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான விஜயேந்திர பிரசாத் மற்றும் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோவில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவைக்கு மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, விஜயேந்திர பிரசாத் ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ராஜ்யசபா நியமன எம்.பி. இளையராஜா உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் பி.டி.உஷா

2010-ம் ஆண்டு மத்திய அரசு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருதும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி சிறப்பித்தது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதி இருந்தார் இளையராஜா. அது மிகப் பெரும் சர்ச்சையானது. அப்போதே இளையராஜாவுக்கு ஏதோ ஒரு பதவியை மத்திய அரசு தரக் கூடும் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று இளையராஜா, நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:தலைமுறைகளைக் கடந்து @ilaiyaraaja
அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன.அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது – எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது.

”மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ”என தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்த ரஜினிகாந்த்.

இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் வாழ்த்துவோம்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்.

இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் ட்வீட்