புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா..

2487

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற செஸ் நடனத்தை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாகப் பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து அதனை புகழ்ந்துள்ளார். இதனையடுத்து இந்த வீடியோ நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இந்த போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதேபோல இந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டங்கள் தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘சதுரங்க நடன சித்தரிப்பு’ என பெயரிடப்பட்ட இந்த வீடியோவில் செஸ் பலகையில் செவ்வியல் மற்றும் கிராமிய நடன அம்சங்களுடன் மல்யுத்தக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இறுதியில் மீசை முறுக்கிய மன்னரை, தனது வாள் வீச்சுத் திறனால் ‘செக்’ வைத்து நிறுத்துகிறார் எதிர் அணியின் ராணி. உரையாடல் எதுவுமின்றி பின்னணி இசையுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் ஆர்வம் கொண்ட புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் முயற்சியில், இந்த வீடியோவை குறும்படங்களில் நிபுணத்துவம் கொண்ட குழுவினர் படமாக்கியுள்ளனர்.

இந்த வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விளையாட்டு நம்மை பெருமைப்பட வைக்கிறது. நமது கற்பனையில் இந்த செஸ் காய்கள் உயிர்ப்பித்துள்ளது போன்று நடனம் உள்ளது’ என பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனந்த் இந்த வீடியோவை பகிர்ந்ததையடுத்து பலரும் அதை ரீ-ட்வீட் செய்து பாராட்டி வருகின்றனர்.