இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்வாக உள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

469

புதிய ஜனாதிபதி ஆக உள்ள திரவுபதிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து

நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வானார். இதன் மூலம் பழங்குடியின வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்னும் சிறப்பை பெற்றார். வரும் 25-ல் பதவியேற்கிறார்.

இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 18ல் நடந்து முடிந்தது. இதில் தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நின்ற யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். இதில் மொத்தமுள்ள 771 எம்.பி.,க்களில் 763 பேரும், 4,025 எம்எல்ஏ.,க்களில் 3,991 பேரும் ஓட்டளித்திருந்தனர்.

பார்லிமென்ட் வளாகத்தில் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. எம்.பி.,க்களின் ஓட்டுக்கு தலா 700 புள்ளியும், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்படும். முதலில் எம்.பி.,க்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாநில வாரியாக எம்எல்ஏ.,க்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் போது தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில் முடிவில் திரவுபதி முர்மு வெற்றி பெறுவது உறுதியானது. எதிர்க்கட்சிகள் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தோல்வியும் உறுதியானது. இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதி ஆகிறார் திரவுபதி முர்மு. அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் , பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த திரவுபதி முர்மு?

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரவுபதி முர்மு, ஜார்கண்ட் கவர்னராக இருந்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி வெற்றிப்பெற்றதால், நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்னும் பெருமையை பெற்றார். அதேபோல், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பிறந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதி ஆவது இதுவே முதல்முறையாகும்.

புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்முவை தேர்வு செய்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்து உள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் மோடி , மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா, பா.ஜ., தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.