சங்ககாலத்தில் கோவில்கள், பூஜைகள், வழிபாடுகள் இருந்ததா?

532

1. கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இங்கே கோவில் கட்டுமானங்கள் இருந்ததா? குறிப்பாக சங்ககாலத்தில் கோவில்கள், பூஜைகள், வழிபாடுகள் இருந்ததா?

2. முற்காலங்களில் இருந்த கோவில் கட்டுமானங்களில் பெரும்பகுதி அழிந்துவிட்டதே? எனில் என்னென்ன பொருட்கள் கொண்டு அந்த கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கும்?

முதலில் கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கோவில் கட்டுமானங்களே இல்லை என்பது நகைப்புக்குரியது. இது ஆய்வாளர்கள் வட்டத்திலும் பேசப்படும் செய்திதான் என்றாலும் இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாமல்லபுரத்திலுள்ள சாளுவன்குப்பம் எனுமிடத்தில் சமீபமாக கண்டெடுக்கப்பட்ட சுடு செங்கற்களால் கட்டப்பட்ட முருகன் கோவில், குடிமல்லத்திலுள்ள பழமையான சிவலிங்கம் போன்றவை குறையாமல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தொல்லியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோவில் கட்டுமானங்களாகும். சங்ககாலத்தை எடுத்துக்கொண்டால் “புறநானூற்றில்” சிவன் கோவிலைச் சுற்றி சிவனடியார்கள் சிவ வழிபாடு செய்தமைக்கு சான்றுகள் உண்டு…!

“பணியியர் அத்தை, நின் குடையே முனிவர்
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே!
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே”


– புறநானூறு.

பொருள் : உனது கொற்றக்குடை முனிவர்களால் போற்றப்படும் “முக்கட் செல்வனாகிய” சிவபெருமான் கோவிலை வலம் வருவதற்கு தாழ்க! உனது தலை, நான்கு வேதத்தினை அறிந்து சிறந்த அந்தணர் உன்னை நீடு வாழ்க என வாழ்த்தும் கையின் முன்னே வணங்குக பெருமானே. என்கிறார். இந்த புறப்பாடலில் சிவபெருமானை முனிவர்கள் சுற்றி வந்து வழிபட்ட செய்தி உள்ளது. கோவில் இருந்தால் தான் சுற்றிவந்து வழிபட முடியும். அதோடு இதே புறநானூற்றின் இன்னொரு பாடலில் இந்திரனுக்கு கோவில் இருந்த தகவலையும் தருகிறது..!

திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே”

– புறநானூறு.

பொருள் : வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோவிலில், போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன. அந்த ஒலி வானத்தில் ஒலித்தது. இப்பாடலில் இந்திரனுக்கு கோவில் இருந்த தகவல் தெளிவாக உள்ளது. மேலும் பட்டினப்பாலையில் காவிரி பூம்பட்டிணத்தில் இருந்த பல வகையான கொடிகளை பற்றி கூறும்போது,

“மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்”

என்கிறார் புலவர். அதாவது தெய்வத்தை வைத்து பூஜை செய்யும் உருவம் பெறித்த கொடி பறந்த நிகழ்வை (அதுவும் கோவில் வாசலில்) தான் முதலில் கூறுகிறது இப்பாடல். இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலாக பதிற்றுப்பத்தில் திருமாலுக்கு கோவில் இருந்ததையும் அக்கோவிலுக்கு பூஜைகள் எப்படி நடைபெற்றது? மக்கள் எப்படியெல்லாம் இறைவனை வழிபட்டார்கள் என்ற செய்திகள் வரை மிகத் தெளிவாக உள்ளது.
இப்பாடலில் புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர் திருமாலின் திருவடிகளை வணங்கும் காலமாக பனி நிறைந்த நாளை குறிப்பிடுகையில்,

“குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து கண் பொரு திகிரி கமழ் குரல் துழாலஅய் அலங்கல் செல்வன் சேவடி பரவி நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர மணி நிற மை இருள் அகல நிலா விரிபு கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டுஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு”– பதிற்றுப்பத்து.

பொருள் : குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய
மண் செறிந்த உலகத்து மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில் கைகளைத் தலைக்குமேல் கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின் நால்வேறான அகன்ற பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க,
தெளிந்த ஓசையையுடைய, உயர்வாக வடிக்கப்பெற்ற மணியை அடிப்பவர்கள் கல்லென்ற ஓசையை உண்டாக்க,
உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி, வண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும், கண்ணைக் கூசவைக்கும் சக்கரப் படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்.

இப்பாடலில் மிகத் தெளிவாக பக்தர்கள் ஒரே நேரத்தில் கைகளை மேலே உயர்த்தி ஒலி எழுப்பி, மணி அடித்து, திருமாலின் திருவடிகளை புகழ்ந்து வணங்கியுள்ள செய்தி உள்ளது. இது சங்ககாலத்தில் நிச்சயமாக கோவில் கட்டுமானங்கள் இருந்தது என்பதை உறுதிபடுத்துகிறது. அடுத்ததாக சங்ககாலத்தில் கட்டப்பட்ட கோவில்களின் பெரும்பகுதி அழிந்துவிட்டதே? எனில் அக்காலங்களில் கோவில்கள் என்னென்ன பொருட்கள் கொண்டு கட்டப்பட்டன என்பதை பார்க்கலாம்..!

முற்காலங்களில் செங்கல், மரம், உலோகங்கள், மற்றும் சுதைப் பொருட்களால்தான் கோவில் கட்டுமானங்கள் கட்டப்பட்டது. இந்த மரபை மாற்றியவர்கள் முற்கால பாண்டியர்களும், பல்லவர்களும்தான் என்பது அறிஞர்களின் குறிப்பிடுகிற்ர்கள். இதற்கு ஆதாரமாக களப்பிர்களை வெற்றிகொண்டு பல்லவ அரசை நிறுவிய சிம்ம விஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் இன்றைய விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு எனுமிடத்தில் எடுக்கப்பட்ட குகைக்கோவிலே இதற்கு உதாரணமாகும். இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டுள்ளது.

“ஏதத் அனிஷ்டகம் அத்ருமம் அலோஹம் அசுதம் விசித்ரசித்தேன நிர்மாபிதம் ந்ருபேன ப்ரஹ்மேஸ்வர விஷ்ணு லக்ஷிதாயதனம்”

பொருள் : செங்கல் இல்லாமல், மரம் இல்லாமல், உலோகம் இல்லாமல், சுதைப் பொருட்கள் இல்லாமல், பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற மும்மூர்த்திகளுக்காக இந்தக் கோவில் விசித்திரசித்தனால் கட்டுவிக்கப்பட்டது. அதாவது முற்காலங்களில் கட்டப்பட்ட கோவில்கள் இயற்கை சீற்றங்களால் அழிந்து போனதற்கு காரணம் இதுபோன்ற கட்டுமானங்களே என்பதை நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர். இதனால் பிற்காலத்தில் கோவில் கட்டுமானங்களை மாற்றி அமைத்தனர். இன்று இருக்கும் பெரும்பாலான கோவில்கள் இதுபோன்ற இயற்கை சீற்றங்களால், படையெடுப்பாளர்களால் சிதையுண்டு பிற்காலத்தில் வலிமையான கட்டுமானங்கள் அக்கோவில்களின் மேற்புறத்தில் எழுப்பப்பட்டு இன்று கம்பீரமாக காட்சியளிக்கின்றன…!

– பா இந்துவன்.