ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்
முகேஷ் அம்பானியை அடுத்து அவரது மகன் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவனத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி ஆசிய அளவிலும் முன்னிலை வகிப்பதோடு, சர்வதேச அளவில் உலகின் பெரும் பணக்காரர்களுக்கு கடும் போட்டியை வழங்கி வருகிறது. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் கால் வைக்காத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் முதல் சில்லறை விற்பனை வரை ரிலையன்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி திடீரென்று விலகியுள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 27ஆம் தேதி முதல் முகேஷ் அம்பானி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் மாற்றம் செய்வதற்கான கூட்டம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கேவி சவுத்ரியை கூடுதல் இயக்குநர்களாக நியமிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்கள். நிர்வாக இயக்குநரான பங்கஜ் மோகன் பவாரின் பதவிக் காலமும் 5 ஆண்டுகள் இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.