ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கோவை மாணவி சுவாதிஸ்ரீ; குவியும் பாராட்டுக்கள்..!

653

மத்திய அரசு நேற்று வெளியிட்ட ‘சிவில் சர்வீசஸ்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இதில் கோவை மாணவி சுவாதி ஸ்ரீ தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுதும், 712 காலியிடங்களை நிரப்பும் வகையில், அகில இந்திய அளவில் குடிமையியல் பணிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் 10ல் நடந்தது.

இதற்கான முடிவுகள் அக்டோபர் 30ல் வெளியாகின.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள், பிரதான தேர்வு எழுத தகுதி பெற்றனர்.

பிரதான தேர்வு, இந்த ஆண்டு ஜனவரி 7 முதல், 16 வரை நடந்தது. இதன் முடிவுகள், மார்ச்சில் வெளியிடப்பட்டன.

பிரதான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு, ஏப்., 14 முதல் மே 24 வரையில் நடந்தது. இதற்கான முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில் கோவையை சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ என்ற மாணவி, அகில இந்திய அளவில், 42ம் இடமும், தமிழக அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் கோவை குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர்.

தந்தை இன்சூரன்ஸ் மற்றும் ஷேர் மார்க்கெட் துறையில் பணியாற்றி வருகிறார்.

தாய் தபால் துறையில் பணியாற்றி VRS வாங்கி ஓய்வு பெற்றுவிட்டார்.

ஸ்வாதி ஸ்ரீ தொடக்கக் கல்வியை ஊட்டியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை குன்னூரிலும் படித்துள்ளார்.

இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள RVS அக்ரி கல்லூரியில் பி.எஸ்சி அக்ரி படித்து முடித்திருக்கிறார்.

கல்லூரி படிப்பின் போதே சிவில் சர்வீஸ் மீது கொஞ்சம் ஈடுபாடு இருந்தது.

கிராமங்களில் விவசாயத்தை பற்றிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள செல்லும் போது விவசாயிகளுடன் தங்கி, அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு எப்படி தீர்வு காணலாம் என்று சிந்தித்திருக்கிறார்.

இவர்களின் நிலையை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்

விவசாயம் சார்ந்த ஏதேனும் உயர் பதவிகளுக்கு சென்றாலும், பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியாது என்று எண்ணியிருக்கிறார்.

எனவே அதைவிட உயர்ந்த இடம் என்னவென்றால் சிவில் சர்வீஸ் மூலம் ஐஏஎஸ் ஆவது தான் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இதற்காக விண்ணப்பித்த போது 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சென்னையில் உள்ள மனிதநேயம் மற்றும் அறம் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடர்ந்து 4 ஆண்டுகள் மிகவும் தீவிரமாக தயாராகி வந்துள்ளார். இரண்டாவது முறை தேர்வெழுதி IRS பதவிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

இருப்பினும் தனது கனவில் இருந்து பின் வாங்கவில்லை. தற்போது மூன்றாவது முறை தேர்வெழுதிய நிலையில் IAS ஆக தேர்ச்சி பெற்று கனவை நனவாக்கிவிட்டார்.