புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

623

இன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் தேதி : 06.05.22

புதுக்கோட்டை சுதர்சன் கல்லூரி அருகில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் நான்கு பேரில் ஒருவர் இறப்பு புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பஞ்சாயத்து புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த ஆசாத் என்பவர் பெரு மாநாடு சுதர்சன் கல்லூரி அருகில் உள்ள விவசாய கிணற்றில் இறந்த நிலையில் புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்களால் மீட்கப்பட்டது

நரிமேடு பகுதியில், மாவட்ட இசை பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் உள்ள இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் பள்ளியில் உள்ள ஆசிரியைகளின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வாழ்த்துக்களை பெற்று தேர்வு எழுத சென்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 334 பள்ளிகளில் பயிலும் 23,298 மாணவர்கள் 119 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர், பாடத்திட்டம் மாற்றபட்டு முதல் முறையாக அரசு பொதுத் தேர்வை மாணவர்கள் எழுத உள்ளதாகவும் குறைந்த காலமே பள்ளிக்கு சென்றருந்தாலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி முழு உழைப்பையும் கொடுத்து நன்றாக படித்து உள்ளதாகவும் இந்த தேர்வை எதிர்கொள்வது சற்று அச்சமாக இருந்தாலும் தேர்வை நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்களை பெறுவோம் என மாணவர்கள் நம்பிக்கை..

புதுக்கோட்டை செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (06.05.2022) வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தில் உள்ள மொட்டகுறிச்சி பெரியகன்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம், இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 7ம் நாள் சித்திரை பூச்சொரிதல் திருவிழா, சிறுவர்களின் சிலம்பாட்டம், இளைஞர்களின் குத்தாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால், குதிரையாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டத்துடன் மங்கள வாத்தியம் முழங்க பூத்தட்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய சேர்மன் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் சுதாஅடைக்கலமணி தலைமையில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், சதாசிவம் மற்றும் துணை சேர்மன் தனலட்சுமி அழகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறையினர், பள்ளிக் கல்வித் துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டப்பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி தருமாறு ஒன்றிய கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

படம் & செய்தி இளையராஜா

பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், நீர்நிலை நிலங்கள் மற்றும் கோவில் மடத்து நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், நீர்நிலை, கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம்.முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்களை வாங்க அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திலகம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி பூங்குன்ற நாயகி அம்மன் கோவில்வீடு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் வீடு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன்குறிச்சி மற்றும் மறவாமதுரை சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் நடத்தி யாக வேள்விகள் செய்தனர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பந்தலில் யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. பின்பு யாகசாலை பந்தலில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடத்தை சிவாச்சாரியர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து சரியாக 10 மணி அளவில் ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் வீடு கோபுர கலசத்தில் கருடபகவான் வருகைக்குப்பின் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அருள் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

படம் & செய்தி இளையராஜா