ஏம்பலில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு பேருந்து இயக்கப்படுமா?

1598

வளர்ச்சி பெறாத மாவட்டங்களின் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து இடம்பெற்றிருக்கிறது. இம்மாவட்ட மக்கள் பெரிதும் நம்பி இருப்பது விவசாயத்தை மட்டுமே. அந்த விவசாயமும் ஒரு சிலரைத்தவிர பெரிய அளவிலான நிலங்களைக் கொண்டவர்கள் எண்ணிக்கைஅதிகமில்லை.நீர்ப்பாசனத்துக்கும் மழையை மட்டுமே நம்பி இருப்பவர்கள்தான் அதிகம். வானம் பொய்த்துப் போனால் இவர்களின் வாழ்க்கையும் வெளுத்துப்போகும். இதனால் நிரந்தர வருமானத்துக்கு வழிதேடி வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும், வெளிமாவட்டங்களிலும் பிழைப்புத் தேடிச் செல்லும் கூட்டமும் இங்கே அதிகம்.

அதுவும் குறிப்பாக ஆவுடையார்கோவில் தாலுகா, அரிமளம் மற்றும் ஏம்பல் வட்டாரத்தைச் சேர்ந்த ஒக்கூர், மித்ராவயல், அரிமளம், கே.புதுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பெரிதாய் பிழைப்புத் தரும் தொழில் எதுவுமில்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலும், உணவகங்களிலும் பணிபுரிந்து தங்களின் வறுமையைப் போக்கி வருகிறார்கள். மேலும் ஐநூறுக்கும் மேற்பட்ட இப்பகுதி மாணவர்கள் கோவை வட்டாரக் கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது ஏம்பல் வட்டாரத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் மாணவர்களும் திருப்பூர் மற்றும் கோவைக்குச் செல்ல வேண்டுமானால் அறந்தாங்கி, புதுக்கோட்டை அல்லது காரைக்குடிக்கு சென்று அங்கிருந்து வேறு பேருந்துகள் மூலம்தான் மாறிச் செல்ல முடியும். இதனால் இவர்களுக்கு பொருள் செலவும், பயண நேரச் செலவும் அதிகமாகிறது. இதனைச் சரிசெய்து தருமாறு எங்கள் பகுதிமக்கள் நீண்டகாலமாக அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதாவது சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை ஒட்டியிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம்தான் எங்கள் ஏம்பல். இங்கிருந்து செங்கரை நால் ரோடு, தேனிப்பட்டி, புதுப்பட்டி, அரிமளம், புதுக்கோட்டை, இலுப்பூர்,விராலிமலை, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் திருப்பூர் வழியாகக் கோவைக்கு புதிய வழித்தடத்தில் தினசரி இரு வழிச் சேவைப் பேருந்து இயக்கப்பட வேண்டும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி வருகிறோம். ஆனால், இன்னும் விடிவு பிறக்கவில்லை.

நேரடி பேருந்து சேவை

அதனால்தான் நம் தமிழக முதல்வர் அவர்கள் இதில் அக்கறையுடன் கவனம் செலுத்தி இந்தப் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை இயக்க உத்தரவிட்டால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், மாணவர்களுக்கும் செய்யும் பேருதவியாக இருக்கும்..” என்கிறார் ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுவின் செயல்தலைவர் பெரியதம்பி.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருப்பூரில் குடும்பத்துடன் வேலை பார்த்து வரும் ஏம்பலைச் சேர்ந்த கண்ணையா, “ஒவ்வொரு தடவையும் திருப்பூரிலே இருந்து ஏம்பலுக்கு வந்துட்டு போக அவ்வளவு கஷ்டப்படுறோம். ஏம்பல் வட்டாரத்தைச் சேர்ந்த கண்ணங்குடி, கப்பலூர், கரூர், சித்தக்கூர், கேசனி, வடகீழ்குடி, வயலாங்குடி, செங்கத்தான்குடி, செம்பிலாவயல், ஆண்டாகோட்டை, மதகம், நாட்டுச்சேரி, குருங்களூர், பாம்பரம்பட்டி போன்ற இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராமங்களிலிருந்து திருப்பூரில் ஆயிரக்கணக்கணக்கான தொழிலாளர்கள் பல வருஷமா வேலை பார்த்திட்டு வர்றோம்.

இப்போ நாங்க சொந்த ஊருக்கு வரணும்னா பல பஸ் மாறிவர வேண்டியிருக்கு. பிள்ளை குட்டிகளைத் தூக்கி, கையிலே லக்கேஜ்களோட மாறி மாறிப் பயணம் செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவும் ஊருக்குப் போயிட்டு திரும்பும்போது அறந்தாங்கிக்கோ இல்லைன்னா காரைக்குடிக்கோ போனால்தான் நாங்க திருப்பூர் நேரடி பஸ்சை பிடிக்க முடியும். அதுவும் எங்க ஏம்பலுக்கு வர்ற அந்த டவுன் பஸ் வரலைன்னா இந்த திருப்பூர் நேரடி பஸ்சையும் பிடிக்க முடியாது. அப்புறம் மாறி மாறித்தான் பஸ் பிடிச்சு போகணும். மாறி மாறிப் போறதுனாலே பஸ் டிக்கெட்டும் அதிகமாயிடும். அடுத்த நாள் வேலைக்கும் போக முடியாது.

எங்க ஊருலே இருந்து அம்மா, அப்பா சொந்தக்காரங்க கொடுக்கிற தேங்காய், அரிசி, இங்கே விளையுற நாலு காய்கறிகளைக் கொண்டு வர்றதுக்கு அவ்வளவு ஆசையா இருக்கும். ஆனா காரைக்குடி, அறந்தாங்கியிலே இருந்து திருப்பூர் போகும் அந்த நேரடி பஸ்சை விட்டுட்டா எப்படி கொண்டு போய்ச் சேர்க்கிறதுன்னே அந்தப் பொருளை எல்லாம் அப்படியே திருப்பிக் கொடுத்துட்டு வரவேண்டிய சூழ்நிலை இருக்கு. அதுவும் இரவு நேரங்களிலே குடும்பம் குடும்பமா பிள்ளை குட்டிகளோட ஒவ்வொரு ஊரா பஸ் மாறி வர்றது பெரிய வேதனை. அதுக்காகத்தான் கோவையிலிருந்து திருப்பூர் வழியா ஏம்பலுக்கு நேரடி பஸ் வசதி இருந்தா என்னை மாதிரி எத்தனையோ பஞ்சம் பிழைக்கிற தொழிலாளர் குடும்பங்களுக்குப் பெருந்துணையா இருக்கும். மக்களுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து தரும் நம்ம முதல்வர் M. K. Stalin எங்களோட இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொடுத்தா எங்களோட பல தலைமுறை உங்களை நன்றியோட நினைச்சுப் பார்க்கும்…” என்கிறார்.

மாணவர்களின் கோரிக்கை

அதேபோல் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கோவை பகுதிகளில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். அவர்களும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து செல்வதற்கு பெரும் அவஸ்தைப்படுகின்றனர். கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் ஏம்பல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவர், “ஏம்பல் வட்டாரத்துலே இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவையிலே உள்ள வெவ்வேற காலேஜிலே படிச்சிட்டு வர்றோம். கோவையிலே இருந்து எங்க சொந்த ஊருக்குப் போயிட்டு வர்ற பெரும் சிரமமா இருக்கு. கோவையிலிருந்து ஏம்பலுக்கு நேரடி பஸ் இல்லாம நாங்க மாறி மாறிப் போகும்போது எங்க பஸ் கட்டணமும் அதிகமாகுது. குறிப்பிட்ட நேரத்துக்கும் போகமுடியலை. இதை எல்லாம்விட மாணவிகள் இரவு நேரங்களில் பல ஊர்களில் இறங்கி பஸ் மாற வேண்டி இருக்கு. இதனாலே மாணவிகளின் அவஸ்தை சொல்லி மாளாது. இதுவரைக்கும் நாங்க எங்க கிராமங்களில் படிச்சிட்டு இப்போதான் கோயமுத்தூர் மாதிரி பெரிய சிட்டியிலே ஹையர் எஜூகேஷன் படிச்சு முன்னேறனும்னு வர்றோம். ஆனா, ஒவ்வொரு லீவுக்கும் ஊருக்குப் போயிட்டு வர்றதுதான் எங்களுக்குப் பெரும் அவஸ்தையா இருக்கு. என்னை மாதிரி எங்கள் பகுதியின் எத்தனையோ மாணவர்களின் நலன் கருதி கோவை- திருப்பூர் வழியாக ஏம்பலுக்கு தினசரி ரெகுலர் பஸ் சர்வீஸ் இருந்தா பெரும் உதவியா இருக்கும். நாங்க நல்லா படிச்சு முன்னேற இந்த அரசாங்கம் எங்களுக்குச் செய்யும் பெரும் உதவியாக இது இருக்கும்…. நம்ம சி.எம். சார் இதைக் கட்டாயம் எங்களுக்குச் செய்து தருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. உடனடியாக இந்தப் புது ரூட்லே பஸ் விட நம்ம முதல்வரும் போக்குவரத்து அமைச்சரும் உத்தரவு பிறப்பிப்பார்கள்னு ரொம்பவும் எதிர்பாக்கிறோம்.. இது ஏழை தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்குமான இந்த விடியல் ஆட்சியில் எங்கள் ஏம்பல் வட்டாரத்திற்கும் தொடர்ந்து வெளிச்சம் தரும்னு நம்புறோம். அதனாலே எங்க கோரிக்கையை ஏற்று இந்த ஆட்சியிலே கட்டாயம் செஞ்சு கொடுப்பாங்க! “ என்று நம்பிக்கை துளிர்விட பேசுகிறார் அந்த மாணவர்.

பஞ்சம் பிழைக்கவும், படிச்சு முன்னேறவும் கோவைக்கு நேரடி பஸ் விடுங்கய்யா மாண்புமிகு அமைச்சர் சிவசங்கர் சா.சி. ஐயா அவர்களுக்கு பின்தங்கிய வட்டாரங்களின் கோரிக்கை ..