தஞ்சை அப்பர் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி.. மேலும் 10 பேர் காயம்

943

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 94ஆவது அப்பர் குருபூஜையின் சித்திரை திருவிழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது தேரை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

தேரை திருப்பும் போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்தது. இதில் 11 பேர் பலியாகிவிட்டனர்.

இந்த விபத்தில் தந்தை, மகன், 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலியாகிவிட்டனர். இந்த விபத்தில் மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), தந்தை அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் உயிர் பலி மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

தேரை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததாகவும் அதனால் 50-க்கும் மேற்பட்டவர்கள் தேரை விட்டு தள்ளி நின்றதால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து ஊர் மக்கள் கூறுகையில், இதற்கு முன்னர் குறுகிய சாலையில் நாங்கள் தேரை திருப்பியுள்ளோம்.

அப்படியிருக்கும் போது இந்த விழாவில் மின்சாரம் நிறுத்தப்படவில்லையா என்ற கேள்வி எழுந்தது. விபத்து குறித்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவர் மின்சாரத் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். தேரின் உயரம், மின் கம்பியின் உயரம் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார். தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்