அஸ்திவாரம் தோண்டும்போது கிடைத்த தங்க நாணயங்கள்!

2322

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது உடைந்த மண்பானையில் கிடைத்த தங்க காசுகள், வருவாய் துறையிடம் நாணயங்களை ஒப்படைத்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கு பாராட்டு!

இது முகலாயர் காலத்து நாணயமாக இருக்கலாம் என கருதப்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் ஜெயலட்சுமி என்பவர் வீடு கட்டுவதற்காக, கட்டுமான பணியாளர்களை கொண்டு அஸ்திவாரம் தோண்டிய போது உடைந்த மண் பானையில் தங்க காசுகள் இருந்துள்ளது.

இதனையடுத்து கட்டுமான பணியாளர்கள் அதை ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்த நிலையில் அவர் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ஜெயலட்சுமி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மண்ணுக்குள் இருந்து கிடைத்த உடைந்த பானையுடன் 63 கிராம் எடை கொண்ட 16 தங்க நாணயங்களை ஒப்படைத்தார்.

வருவாய் துறையினர் ஜெயலட்சுமியை பாராட்டி சால்வை அணிவித்தனர். பின்னர் அந்த பதினாறு தங்க நாணயத்தையும் கருவூலத்தில் ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தனர். மேலும் இது முகலாயர் காலத்து நாணயமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.