திருக்கார்த்திகையில் தீபமேற்றுவது ஏன்?

117

கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது, சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது என்கிறது.

சிவமகாபுராணம்: தீபம் என்பது லட்சுமி தேவியின் வடித்தையும், சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும், பார்வதியின் சக்தியையும் ஒன்றாக சேர்த்திருப்பது. எனவே மூன்று தேவிகளின் வடிவமான தீபத்தைக் காணும் எந்த ஓர் மனிதனும், புழு, பூச்சி, பறவைகள் கூட நற்கதி எய்தும் என்பது ஆன்றோர் மொழி. எனவே தான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.எனவே கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், முத்தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

கார்த்திகை மாதத்தில் தீபமேற்றி வழிபடுவதன் காரணமென்ன? `

கார்த்திகை தீபம்’ சிறப்புகள்!

கார்த்திகை மாத தீப நன்னாளில் மட்டுமல்ல அந்த மாதம் முழுக்கவே தீபமேற்றி வழிபட்டார்கள் நம் முன்னோர்கள். இதை நம் சங்க இலக்கியங்கள் பலவும் குறிப்பிடுகின்றன.

தீபமேற்றி வழிபடுவதைக் காட்டிலும் சிறப்பானதொரு வழிபாடு இல்லவே இல்லை என்கின்றன திருமுறைகள். இறைவன் ஜோதி வடிவானவன். அவனே சகல இருளையும் அழித்து வெளிச்சம் அளிப்பவன் என்பதை உணர்த்தும் திருநாளே திருக்கார்த்திகை நன்னாள்.

சரணாகதி தத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன விழா தீப விழா. கல்வியும் செல்வமும் இறைவனை அடைய உதவாது, உண்மையான அன்பே இறைவனைச் சேர உதவும் என்று சொன்ன விழா இது.

63 நாயன்மார்களின் நமிநந்தி அடிகளே ‘தொண்டர்க்காணி’ என்று
போற்றப்படுகிறார். அதாவது அடியார்களுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார் என்று பொருள். காரணம் அவர் பெரும் இக்கட்டானச் சூழலிலும் விளக்கிடும் திருப்பணியை நிறுத்தவே இல்லை.

திருவாரூர் ஆலயத்தில் விளக்கேற்றும் பணியைச் செய்துவந்த நமிநந்தி அடிகள், விளக்கேற்ற நெய் இல்லாத வேளையில், நெய் யாசகம் கேட்டு சென்றார். அப்போது புற சமயத்தார் அவரை கிண்டலும் கேலியும் செய்து, நெய் இல்லாவிட்டால் என்ன, உமது ஈசனின் அருளால் நீரை விட்டு விளக்கு இடலாமே என்று சொன்னார்கள்.

அதன்படியே கமலாலயத் திருக்குளத்தில் நீர் அள்ளி விடிய விடிய ஆலயம் முழுக்க விளக்கேற்றினார் நமிநந்தி அடிகள். விளக்கேற்றும் பணியால் சகலருக்கும் நன்மை விளைகிறது அதனால் அதுவே தலையாயத் தொண்டு என்று போற்றப்படுகிறது.

நால்வகை விளக்குகளை நாவுக்கரச பெருமான் நயத்தோடு விளக்குகிறார். இல்லத்தில் தோன்றும் ஜோதி இருள் கெடுக்கும். எளிமையான சொல்லால் விளையும் ஜோதி தெளிவைக் கொடுக்கும். எல்லோரும் பார்க்கும் பிரமாண்ட விளக்கான சூரிய ஜோதி பலருக்கும் வழியைக் கொடுக்கும். ஆனால் நெஞ்சத்தில் தோன்றும் ‘நமசிவாய’ என்னும் நல்ல விளக்கு ஒன்றுதான் இறைவனை அடைய உதவும் என்கிறார் அப்பர் பெருமான்.

‘இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.’

எல்லா யுகங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட முதன்மையான விழா கார்த்திகை தீப விழாவே எனலாம். “துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்; விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்!” என்கிறது தேவாரம். ஞானம் பெற ஒரே வழி விளக்கிடுவதுதான் என்கின்றன மறைகள்.

திருக்கோயிலில் சுவாமிக்கு நாம் நேரடியாகச் செய்யும் ஒரே தெய்வக் கைங்கர்யம் விளக்கிடுவதுதான். அகத்தில் தோன்றும் மெய்ஞ்ஞான விளக்கே ஈசனின் கழலை அடைய உதவும் என்று திருமூலரும் வலியுறுத்திக் கூறுகிறார்.“விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலு மாமே”

அதாவது விளங்கிக் கொண்ட விளக்கத்தில் இருந்து விலகி, மெய்ஞ்ஞான பரம்பொருளை நம்முள் தூண்டி விளக்கேற்றி, சிவ ஒளிக்குள் ஆன்மா எனும் சீவ ஒளி விளங்கும் படிசெய்து வழிபட்டால் சகலத்தையும் விளக்கும் ஈசனின் கழலை அடையலாம் என்கிறார் திருமூலர்.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத் தோடு வரும் நாளே திருக்கார்த்திகை விழா. இந்நாளில் தான் ஈசன் திரிபுரம் எரித்து ஆணவத்தை அழித்தார். மால் – அயன் இருவருக்கும் தோன்றிய மாயையை ஒழித்தார். கன்மம் எனும் வினைப்பயனை ஒழிப்பதும் இந்நாளே என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே மூவினைகளும் அழியும் இந்த தீபத் திருநாளில் வீடெங்கும் வீதியெங்கும் விளக்கேற்றி வழிபடுவோம்.

கார்த்திகை மாதத்தில் தீபமேற்றி வழிபடுவதன் அறிவியல் காரணமென்ன?கார்த்திகை மாத தீப நன்னாளில் மட்டுமல்ல அந்த மாதம் முழுக்கவே தீபமேற்றி வழிபட்டார்கள் நம் முன்னோர்கள். இதை நம் சங்க இலக்கியங்கள் பலவும் குறிப்பிடுகின் றன. இந்த தீபக் கொண்டாட்டம் என்பது வெறும் புராண நம்பிக்கை மட்டுமல்ல, மழைக்காலம் சற்றே ஓய்ந்து குளிர் பரவும் காலத்தில் சிறு பூச்சிகளும் கொசுக்களும் அதிகம் உலாவும். இதனால் ஊரெங்கும் காய்ச்சலும் சளியும் பரவும்.

இதை பெருமளவு கட்டுப்படுத்தவே வீடெங்கும் வீதியெங்கும் அப்போது தீபமேற்றப்பட்டது. நல்லெண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, பேராமணக்கு, பசு நெய், வேப்பெண்ணெய், புங்கமர எண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி ஊரெங்கும் விளக்கேற்றினார்கள்.

இதனால் கொசு மற்றும் பூச்சிகள் குறைந்து நோய்களும் கட்டப்பட்டன. மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் பல்வேறு நன்மைகள் விளைகின்றன எனலாம். எனவே அறிவியல் ரீதியாகவும் நன்மைகள் பலபுரியும் தீப விழாவை சகலரும் கொண்டாடி மகிழ்வோம்!

பொதுவாக வீடுகளில் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 தீபங்கள் ஏற்றுவது சிறப்பானது. குறைந்த பட்சம் 3 தீபங்களாவது ஏற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒன்று உங்கள் குடும்பத்துக்காக, ஒன்று உங்கள் மூதாதையர்களை வழிபடும் பொருட்டு, மூன்றாவது விளக்கு உங்கள் எதிர்கால சந்ததிகள் நலமுற்று வாழ என்று கூறப்படுகிறது. எனவே நன்மைகள் உயர, தீமைகள் விலக தீபமேற்றுவோம்.

மன்னுயிர்கள் வாழவும், மழை வளம் காணவும் தீபமேற்றுவோம். உழவும் தொழிலும் உயர்நிலை பெறவே தீபமேற்றுவோம். குமராலய தீபம், விஷ்ணுவாலய தீபம், சர்வாலய தீபம் என்று அவரவர் வழமைப்படி தீபமேற்றுவோம், நம் தர்மங்களை மேலேற்றுவோம்!

கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?

கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவார்கள். சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.


கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப் படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கை க்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்து விட்டு எரியும் தன்மை உடையது.

பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.

பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது.

சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது ஐதீகம்!

அதே நேரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில், சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகைத் தீப நாளில் “மாவளி” சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும். பாதாளத்தில் வசிக்கும் மாவலி, தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு மகிழ்கிறார் என்கிற ஐதீகத்தால் அவர் பெயரால் இது “மாவலி” ஆனது என்றும் கூறுகின்றனர்