புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்
ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தன்று முதல் கடவுளாக கற்பக விநாயகர் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புத்தாண்டு தினத்திற்கு இன்னும் எட்டு நாட்கள் மட்டும் உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் வசதிக்கேற்ப பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து புத்தாண்டு தினம் அன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மூலவர் முகப்பு பகுதியில் அருகே உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.