அனுமன் ஜெயந்தி!!!

276

அனுமன் ஜெயந்தி, வெள்ளிக்கிழமை மார்கழி மூலம் அமாவாசை அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்படும்.
அவசியம் இயன்ற அன்பர்கள் நேரில் சென்று தரிசிக்க வேண்டும் !ஸ்ரீ ராமஜெயம்

மார்கழி மாத அமாவாசை நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அனுமன் ஜெயந்தியாக தென் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் திருக்கோவில் . மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அனுமன் ஜெயந்தி விழா நாளன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு நாளை 23ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட உள்ளது.
அனுமன் ஜெயந்திக்காக ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணியில் 2025 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், தலா 32 கிலோ மிளகு சீரகம் ,125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொருட்களை சுத்தம் செய்து மாவரைத்து வடை செய்யும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறும் என்றும் இப்பணி வருகிற 22ஆம் தேதி காலை நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாமம் சொல்லுங்கள்

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதம் இருக்க வேண்டும். அன்று நாள் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும்.

குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும்.

துளசி மாலை

ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

சொல்லின் செல்வன்

அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.

இன்று!

மார்கழி 8, டிச.23

சிறப்பு : அனுமன் ஜெயந்தி, அமாவாசை விரதம்,

வழிபாடு : அனுமனுக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

.அமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, மதியம் இலையில் சாப்பிடவேண்டும். காகத்துக்கு உணவு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும். அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்களுக்குச் சேரும் புண்ணியம் யாவும் நமக்கும் வந்துசேரும். நமக்கு மட்டுமின்றி, நம் சந்ததிக்கும் வந்துசேரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

முன்னோர் வழிபாட்டை மட்டும் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.

அமாவாசை நாளில், யாரெல்லாம் பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோர்களை, பெற்றோர்களை முறையே வழிபட்டு வணங்கி ஆராதிக்கிறார்களோ, அதனால் கிடைக்கும் பலன்கள் மொத்தமும் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பிள்ளைகளுக் கும் போய்ச் சேரும் என்று தர்மசாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது.

சுமங்கலிகள் ஒருபோதும் அமாவாசை நாளில் விரதம் இருக்கக் கூடாது. ஆகவே, மனைவியானவள், விரதம் இருக்காமல் சாப்பிடவேண்டும். இன்னொரு விஷயம்… அமாவாசை விரத நாளில், விரதப் படையலாக, மாமனார், மாமியாருக்காகச் சமைக்கும் உணவை வெறும் வயிற்றுடன் சமைக்கக்கூடாது என்றும் காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகுதான் சமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமாவாசை நாளில், காலையில் தர்ப்பணம் செய்யவேண்டும். காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும். பின்னர், நம் முன்னோருக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து, அவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, குடும்பத்துடன் வணங்கவேண்டும். பின்னர், காகத்துக்கு சமைத்த உணவு அனைத்திலிருந்தும் கொஞ்சம் எடுத்து வழங்கவேண்டும். இதன் பின்னர், இலையில் உணவு சாப்பிடவேண்டும். முக்கியமாக, முன்னோரை நினைத்து நான்கு பேருக்காவது உணவு வழங்க வேண்டும். இது, இருப்பதிலேயே மிகப்பெரிய புண்ணியம்.

நாளில், நாம் முன்னோரை நினைத்துச் செய்கிற எல்லாக் காரியங்களும் மும்மடங்கு பலன்களை நமக்கு வழங்கும் என்கிறது சாஸ்திரம். மாலையில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். மீண்டும் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து நம் முன்னோர்களையும் இறைவனையும் நமஸ்கரிக்க வேண்டும்.

அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. அன்றைய தினம் யாரையும் கோபமாக பேசக்கூடாது.

அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.