உலகசாம்பியன் அர்ஜென்டினா
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்சை சாய்த்து 3-வதுமுறையாக கோப்பையை கையில் ஏந்தியது.
தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின.
கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்னகத்தே ஈர்த்த இந்த இறுதியுத்தம் முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது. தொடக்கத்தில் அர்ஜென்டினா அணியின் கையே ஓங்கியது. அட்டகாசமான தற்காப்பு வளையத்தை உருவாக்கி எதிராளிகளிடம் பந்து அதிகம் செல்லாதவாறு பார்த்துக் கொண்ட அர்ஜென்டினா அணியினர் அடிக்கடி பிரான்சின் கோல் கம்பத்தை நோக்கி படையெடுத்தனர்.
ஒரு சில ஷாட்டுகள் தடுக்கப்பட்டன. 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிரூட் நீண்ட தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து கம்பத்திற்கு மேலாக பறந்தது.
முதல் பாதியில் 2 கோல் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல் கோல் அடித்தது. பந்துடன் கோல் ஏரியாவுக்குள் ஊடுருவிய அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியாவை பிரான்சின் டெம்பெலே கையால் இடித்து தள்ளியதால் அர்ஜென்டினாவுக்கு நடுவர் உடனடியாக பெனால்டி வாய்ப்பு வழங்கினார்.
இந்த வாய்ப்பில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி பதற்றமின்றி லாவகமாக கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினா, பிரான்சின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி மேலும் ஒரு கோல் போட்டது. அந்த அணியின் மாக் அலிஸ்டர் தட்டிக்கொடுத்த பந்தை ஏஞ்சல் டி மரியா வலைக்குள் செலுத்தினார்.
கோல் அடித்த பூரிப்பில் அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வலுவான முன்னிலையை தொட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பிரான்ஸ் பயிற்சியாளர் டெசாம்ப்ஸ், தங்கள் அணியின் டெம்பெலே, ஜிரூட் ஆகிய முன்னணி வீரர்களை வெளியேற்றி விட்டு மாற்று வீரர்களை களம் அனுப்பினார்.
முதல் பாதியில் பிரான்ஸ் வீரர்கள் பக்கம் பந்து செல்வதே அபூர்வமாக தெரிந்தது. அவர்களால் ஒரு ஷாட்டுகளும் அடிக்க முடியவில்லை. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அணி முதல் பாதியில் ஒரு ஷாட் கூட அடிக்காதது இதுவே முதல் முறையாகும். – உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!! எம்பாப்பே கலக்கல் ஆனாலும் நம்பிக்கையை இழக்காத பிரான்ஸ் வீரர்கள் பிற்பாதியில் வேகத்தை மேலும் கூட்டினர்.
இரு அணியினரும் மாறி மாறி கோல் வலையை நோக்கி முற்றுகையிட்ட நிலையில் 80-வது நிமிடத்தில் பிரான்சுக்கு பெனால்டி அதிர்ஷ்டம் கிட்டியது. அந்த வாய்ப்பை பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே கோலாக்கினார். அடுத்த நிமிடத்தில் மெஸ்சியிடம் இருந்து தட்டிப்பறிக்கப்பட்ட பந்து சில கால்களை சுற்றிக் கொண்டு எம்பாப்பே பக்கம் வர அதையும் அவர் பிரமாதமாக கோலுக்குள் உதைத்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.
அதன் பிறகு கடைசி நிமிடத்தில் மெஸ்சி அடித்த சூப்பரான ஷாட்டில் இருந்து பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் தற்காத்துக் கொண்டார். வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் 108-வது நிமிடத்தில் மெஸ்சி கோல் அடித்தார்.
அதுவே வெற்றி கோலாக இருக்கலாம் என்ற நினைப்பை மீண்டும் எம்பாப்பே தகர்த்தார். 118-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து அர்ஜென்டினா வீரர் மோன்டியல் பந்தை கையால் தடுத்ததால் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் எம்பாப்பே கோல் போட்டார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல் என்ற மகத்தான சாதனையையும் 23 வயதான எம்பாப்பே படைத்தார்.
*இப்படி ஒரு மேட்ச் என் வாழ்நாளில் பார்த்ததில்லை.. அட்டகாசமான ஃபைனல் .. மெஸ்ஸியின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. மிக கடுமையாக போராடி தான் மெஸ்ஸி இந்த தருணத்தை எட்டியிருக்கிறார் .. துவக்கத்தில் சவுதி அரேபியாவிடம் தோற்று பின்பு வீறு கொண்டே எழுந்தது. இன்றைய ஆட்டத்தில் மெஸ்ஸியின் முதல் கோல் விமர்சனங்களை பெற்றாலும், தளர்ந்த நிலையிலும் கடைசி வரை போராடி தனது கனவை நிறைவேற்றி இருக்கிறார்..*
*எனது பார்வையில் இன்றைய போட்டியின் கதாநாயகனே பிரான்ஸ் புயல் வேக வீரர் Mbappe தான்.❤️ ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் இந்த பைனல் மேட்ச் உலகமே மறக்க முடியாத ஒரு வரலாற்று நினைவு போட்டியாக மாற்றி அமைத்தார்.. என்ன வேகம்.. நேர்த்தியான ஆட்டம்.. இந்த தொடரில் அனைத்து நிலைகளிலும் முழுமையான தொழில் முறை ஆட்டத்தை சிறப்பாக விளையாடிய அணி பிரான்ஸ் மட்டுமே..*
*அர்ஜெண்டினா வெற்றியை தொடும் அந்த தருணங்களில் .. அந்த சூழல்களை தனது வெறித்தனமான ஆட்டத்தால் தலைகீழாக மாற்றி இருப்பார் சம்பவக்காரன் Mbappe.. இரண்டு அணி வீரர்களுமே கடுமையாக சோர்வுற்ற நிலையில் பெனால்டி சூட் அவுட்டில் .. அர்ஜெண்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியிருக்கிறது…*
*⚽உலக கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா:*
*உலக கோப்பை கால்பந்து 2022 இறுதிப்போட்டி: அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.*
*நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட் அவுட் முறையில் உலக கோப்பையை வென்றது.*