பாதுகாக்கப்பட்ட சிறையாக திருச்சி மத்திய சிறையை மத்திய அரசு தேர்ந்தெடுத்து உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்
பாதுகாக்கப்பட்ட சிறையாக திருச்சி மத்திய சிறையை மத்திய அரசு தேர்ந்தெடுத்து உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். மாதிரி நீதிமன்ற போட்டி சட்ட கல்வி இயக்ககம் சார்பில் அரசு சட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாதிரி நீதிமன்ற போட்டி திருச்சி அரசு சட்ட கல்லூரி வளாகத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் குழுக்களாக பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- பாதுகாக்கப்பட்ட சிறை திறமையான வக்கீல்களை உருவாக்கும் விதமாக சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதிரி நீதிமன்ற போட்டிகளை நடத்த அரசு அனுமதித்துள்ளது. சர்வதேச நீதிமன்ற போட்டிகளில் தமிழக அரசு சட்ட கல்லூரிகளிலிருந்து 4 பயிற்சியாளர்களுடன் செல்லும் 21 மாணவர்களுக்கான செலவினை அரசே ஏற்கும். இதற்காக ரூ.30 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. திருச்சி மத்திய சிறையை பாதுகாக்கப்பட்ட சிறையாக மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. அதனால் திருச்சி மத்திய சிறையை இருக்கும் இடத்திலேயே வைத்துக்கொள்வதா? அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதா? என்று அரசு ஆலோசித்துக்கொண்டு இருக்கிறதே தவிர, எந்த முடிவும் எடுக்கவில்லை. 292 ஏக்கர் ‘பக்கத்திலேயே இதை விட அதிகமாக 292 ஏக்கருக்கு மேல் நிலம் தருகிறேன்.
நீங்கள் அங்கே மாற்றிக்கொண்டு, ஒரு புதிய சிறைச்சாலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’ என்று திருச்சி மாவட்ட கலெக்டர் கருத்துரு அனுப்பி உள்ளாரே தவிர, சிறையை மாற்றுவது தொடா்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. திருச்சி பெண்கள் சிறையை கள்ளிக்குடிக்கு மாற்ற போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. புதிய சிறைச்சாலை அமைக்கப்படுமானால், அங்கேயே இரு சிறைச்சாலைகளையும் கொண்டுசெல்லும் வாய்ப்பு இருக்கிறது. சிறைத்துறை உள்துறை கட்டுப்பாட்டில் வருவது. முகாம் சிறை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் வருவது. இவ்வாறு அமைச்சர் கூறினார்