3 கோடி மதிப்பிலான யானை தந்தங்களை பறிமுதல்..

290

காளையார்கோவில் அருகே கண்மாயில் புதைத்து வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்பிலான யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்..

பெங்களுருவிலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சட்டவிரோதமாக யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் திருப்பூர் எம்ஜிர் காலனி ஜெயக்குமார், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ் பாண்டியன் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பெங்களுருவில் ராஜாஜி நகரில் இருந்து கார் மூலம் யானை தந்தங்களை கடத்தி வந்து, காளையார்கோவில் அருகே உள்ள மணியங்குடி கண்மாய் பகுதியில் புதைத்து வைத்தது தெரியவந்தது.இதனை அடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்மாயில் புதைக்கப்பட்ட 9.46 கிலோ எடையிலான 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக சங்கர், ஜெயக்குமார், கணேஷ் பாண்டியன் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், பின்னர் 3 பேரையும் சிவகங்கை மாஜிஸ்திரேட் ஒன்றாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் மற்றும் மதுரை சிறையில் அடைத்தனர்.

நன்றி : இளையராஜா கீரவாணி