சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்புகள்

260

இன்று புரட்டாசி 17, அக்டோபர் 4-10-2022

சிறப்பு: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, மகாநவமி

இன்று நவமித் திதி நேரம் நன்கு அமர்ந்து மிகவும் பொறுமையாக, ஸ்ரீசரஸ்வதிக்கு லட்சார்ச்சனை நிகழ்த்துதல் மிகவும் விசேஷமானது. முதலில் சற்றுக் கஷ்டமானாலும் கடைபிடித்துப் பாருங்களேன், இதன் மகத்துவங்கள் அற்புதமாகப் புலனாகும்.

இன்றைய பஞ்சாங்கம்

அக்டோபர் 04-10-2022, சுபகிருது வருடம், புரட்டாசி 17, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 02.21 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.

மஹா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. பூஜைக்கு உகந்த நேரம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 08.00 மணி வரை.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை

ஆயுதபூஜை

இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும்.

தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூ ர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயபடுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே. விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் மேன்மை தரும்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை

கல்வி கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்களை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்து அழித்ததன் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படு கிறது என்கின்றன புராணங்கள்.

இந்த நாளில் அன்னை துர்கா தேவியை வேண்டி எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும்

அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம்.

சரஸ்வதி தேவியை வணங்கிட ஆயகலைகள் அறுபத்து நான்கும் நமக்கு கிடைக்கும். கலைமகளுக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன.

அவற்றுள் முக்கியமான பெயர்கள். கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்தாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி,
சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.

சரஸ்வதி பூஜையன்று மட்டுமே புத்தகங்களை எடுத்து வைத்துப் பூஜிப்பது என்றல்லாது, பட்சந் தோறுமாக, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வரும் நவமித் திதியில், முக்கியமான புத்தகங்கள், ஆபீஸ் ரெகார்டுகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், இட்டுப் பூஜித்தல் வேண்டும். இவ்வாறு சிறு வயதிலிருந்தே புனர் பூச நட்சத்திர நாள், நவமித் திதிப் பூஜைகளை ஆற்றி வந்தால், கல்வியறிவு, நல்ஒழுக்கத்துடன் நன்கு பரிமளிக்கும்.