விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது

1238

புதுக்கோட்டை மாவட்டத்தில்
விவசாயிகளுக்கு மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, Kavitha Ramu இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் சிறு/குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் வழங்கும் திட்டம் தனிநிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.

“இறைக்கிற கிணறு சுரக்கும்” எனும் பழமொழிக்கேற்ப கிணறுகளிலிருந்து பாசனத்திற்கு நீரிளை இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தொலை நோக்குத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு/குறு விவசாயிகளுக்கு, பாசன நீரை இறைத்திட புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன்பெறும் வண்ம் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ. 10,000/- மானியம் வழங்கப்படும்.

எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற சிறு/குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டைவிபரம் மற்றும் வங்கிப் புத்தகத்தின் முதல் பக்சு நகலுடன், இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை அலுவலகத்திலும், அறந்தாங்கி கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, இராஜேந்திரபுரம், அறந்தாங்கி உபகோட்டத்திலும் மனுக்கள் அளித்து பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விபரங்களுக்கு, திருச்சி மெயின் ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, செயற்பொறியாளர் (வே.பொ), அலுவலகம், தொலைபேசி எண்: 04322 221816 மற்றும் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), புதுக்கோட்டை, கைபேசி எண்: 99944 05285 மற்றும் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), அறந்தாங்கி, கைபேசி எண்: 94436 04559 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.