அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்-மதுரை நெடுஞ்சாலையில் வேளாங்கண்ணியில் இருந்து மதுரை நோக்கி இன்று அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 25 பயணிகள் பயணித்தனர்.
பேருந்து சிவகங்கை மாவட்டம் எஸ்எஸ் கோட்டை, செவல்பட்டி விலக்கு அருகே திருப்பத்தில் திரும்பியபோது குறுக்கே பைக் ஒன்று வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் பைக் மீது மோதுவதை தவிர்க்கும் விதமாக வேகமாக பிரேக் போட்டுள்ளார். இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 18 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.எஸ். கோட்டை போலீசார் பஸ்சில் பயணம் செய்த அனைவரையும் மீட்டு காயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.