புதுக்கோட்டை நகராட்சி சிம்மாசனத்தை அலங்கரிக்க போகும் தலைவி யார்.?!

1116

புதுக்கோட்டை நகராட்சியில் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றியுள்ளதால் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நூற்றாண்டு கண்ட பழமையான நகராட்சியான, 42 வார்டுகளைக் கொண்ட புதுக்கோட்டை நகராட்சியில் திமுக 23, மதிமுக 1, காங்கிரஸ் 3 என 27 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 8 இடங்களிலும், அமமுக 1 இடம் மற்றும் சுயேச்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றுள்ள திமுகவினர், தமிழக முதல்வரை சந்திக்க சென்னை சென்றுள்ளனர்.

வரும் மார்ச் 4-ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர் பதிவியானது இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த மொத்தம் 23 உறுப்பினர்களில் வடக்கு மாவட்ட மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில்குமாரின் மனைவி திலகவதி,

கலை இலக்கிய அணியின் நிர்வாகி சாத்தையாவின் மனைவி வளர்மதி .

நெசவாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலுவின் மனைவி செந்தாமரை,

பே.இராஜேஸ்வரி ஆகியோர் தலைவர் பதவிக்கான பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், தலைமையின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றப் போவது யாரென்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.