மிகவும் பழமையான கோவில் இந்த பழனி மலை பாலதண்டாயுதபாணி கோவில். இக்கோவில் முருகனின் “ஆறு படை” வீடுகளில் “மூன்றாம் படை” வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் “திருஆவினன்குடி” என்றும் “தென்பொதிகை” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் “தண்டாயுதபாணி” மற்றும் “குழந்தை வேலாயுதர்” என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் “ரசவாத கலையை” பயன்படுத்தி, “நவபாஷாணத்தில்” செய்யபட்ட முருகனின் சிலையை போகர் சித்தர் ஸ்தாபித்தது தான்.
இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயிலில் பக்தர்கள் மத்தியில் கடன்செலுத்தம் பழக்கம் ஏற்பட்டது.

- தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
- ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
- அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
- இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
- விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
- தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
- தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
- அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
- இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
- அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
- அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
- போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
- கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.
- தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.
- பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன் குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.

கோயில் வரலாறு:
நாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்கு விரும்பினார். ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி, பழத்தை பெற மகன்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை முதலில் யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தை உலகத்தை சுற்றிவர சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பரிசாக பெற்றார். அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பெற்றோரை விட்டு பிரிந்து பழனி முருகன் கோயிலில் குடிபெயர்ந்தார். அன்றில் இருந்து முருகன் தங்கியிருந்த இந்த படை வீடு, (பழம்+நீ) பழனி என அழைக்கப்படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்:
பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிப்பாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
மலைக்கோயில், பெரியநாயகி கோயில், திருவினன்குடி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் தினசரி காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்து இருக்கும்.
தலச் சிறப்புகள்:
குடும்பத்தில் சந்தோஷம், தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர். பொதுவாக குழந்தைகள் தாயிடம் பிறந்து தந்தையிடம் அடைக்கலம் பெறுவார்கள். ஆனால், முருகனோ, தந்தையின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்து, தாய் பார்வதியின் அரவணைப்பில் வளர்ந்தார். முருகன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவின்குடி தலமே, “மூன்றாம்படை வீடு” என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழனி பஞ்சாமிர்தம் பக்தர்கள் மத்தியில் விஷேச பிரசாதமாக விளங்குகிறது.
சுற்றுலா தலம்:

பழனி முருகன் முதலில், பக்தர்கள் வேண்டுதல்கள் மற்றும் தெய்வ வழிப்பாடுகள் செய்ய வந்து செல்ல ஒரு புன்னியதலமாக விளங்கியது. காலப்போக்கில், பழனி மலைக்கோயிலுக்கு தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள், மலைக்கோயிலை சுற்றிப் பார்க்க தமிழக அரசு ரோப்கார் (கம்பிவட ஊர்தி) வசதி செய்துள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பழனி மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சி பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல இந்த ரோப்காரில் சென்று வருகின்றனர்.
தண்டாயுதபானி – பெயர் காரணம்:
இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.

பழனி முருகன் கோயில்:
மூலவர் : தண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி.
தல விருட்சம் : நெல்லி மரம்
தீர்த்தம் : சண்முக நதி
ஆகமம் : சிவாகமம்.
புராணப் பெயர் : திருஆவினன் குடி.
ஊர் : பழனி
மாவட்டம்: திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி 624601. திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி: 04545-242293, 242236, 242493.