தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலானது. இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகள் கொடுக்கலாமா என்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதனால் ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவியது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்டுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு மையங்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ம் தேதி முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை ஹோட்டல் பேக்கரி சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.